தமிழ்
கவிஞர்: ப.சித்ரா
📚 ₹450 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
முதிர்ந்த செங்கனியில் தித்திக்கும் செந்தேனை
ஒருசேர கலந்து ஒன்றாகச் சுவைத்தால்
கிடைக்கப்பெறும் இனிமையிலும் சற்று மிஞ்சியே நிற்பாள்,
எங்கள் தாய் என்றும் இனிமையில் எஞ்சியே நிற்பாள்!
ஓங்கி நிற்கும் மலையும் தாங்கி நிற்கும் நிலமும்
தோன்றிய போதே தோன்றியவள் என்பதால்,
காலத்தால் மூத்தவள் தான் எங்கள் தாய்;
ஆனால் தோற்றத்தால் அவள் என்றுமே எங்களுக்கு கன்னித்தாய்!
ஓங்கிய பெரும் உச்சியில் ஒய்யாரமாக வலம் வரும்
ஒளி பொருந்திய செங்கதிரவனைப் போலத்தான்,
எட்டாத புகழின் உச்சியில் அமர்ந்திருக்கிறாள்;
எங்கள் தாய் மனங்களிலெல்லாம் நீங்காது நிறைந்திருக்கிறாள்!
திசையெங்கும் பரவும் காற்றும், பொங்கி பெருகும் ஊற்றும்
தன்னைப் புதுப்பித்து புத்துயிர் பெறுவது போலத்தான்,
எங்கள் தாயும் புதுமைகளை வரவேற்று புகுத்திக் கொள்வாள்;
காலத்தால் அழியாது என்றும் நிலைத்துக் கொள்வாள்.
வற்றாத ஊற்றாக இலக்கியமும் அதனை வரையறுக்கும்
இலக்கணமும் கொண்டு விளங்குபவளே எங்கள் தாய்
அவளே போற்றுதலுக்குரிய நம் தமிழ்த்தாய்
அவளை போற்றாத தமிழ் நாவும் இல்லை
அவளை போற்றாவிடின் அது தமிழ் நாவே இல்லை!…
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.