கவிஞர்: மகேஸ்வரி
📚 ₹1500 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
ஊற்றெனுந் தமிழ் எடுத்து
சிறு தொண்டை நனைத்து
நா சுழற்றி உச்சரிக்கும்
எழுத்துக்களால் உள் விழுங்கும்
எச்சிலும் இனிக்க…
லகர வரிசை கற்பிக்கும்
முன் பின் நடுவில் சுழற்றும்
பாடு மறந்து பாடலாய்
இசைக்க செய்யும் ஆன்றோர்
பயிற்றலும் அமுதம் ஆகிட…
பிழை பொறுக்கா முன்னோர் சொல்
கேட்பதும் நன்மைக்காம் மொழி
வளர்ப்பதும் வேரூன்றி நிற்பதும்
தமிழ் மண்ணிற்காம் என்றென்
ஐயம் கலைந்து நீக்கிட…
ஏட்டில் வரைந்ததை புத்தகமாக்கி
பாட்டில் ஏற்றி பாவலனால்
பயிலும் பாமரனும் பாடிட
எத்தனிக்கும் எளிமை சொற்களிலும்
எம் தமிழ் சிறப்பித்திட…
வள்ளுவனும் ஈரடி சொல்லெடுத்து
வாழ்வியலுக்கு உகந்தார்போலே
ஊட்டிவிட உலகத்தவரும் மொழிமாற்றி
பெருமைக்கொள்ளும் மகத்துவமிக்க
மந்திரமாம் திருக்குறளும் மாறிட…
மலையெட்டும் எங்கள் மொழியின்
உயிர்த்துடிப்பும் உணர்வு பெருக்கும்
ஓங்கி ஒலிக்கும் ஓங்கார முழக்கம்
எம் ஐயன் பாரதியின் தமிழ் முழக்கம்
காணாதோர் உண்டோ…
பார் புகழும் தாய்திருநாட்டின்
வளமை மொழியாம் தமிழ் மொழியைக்
கேளாதோர் உண்டோ எங்கெங்கு
காணினும் தமிழடா நீ எங்கெங்கு
சென்றிடினும் தமிழனடா…
கலித்தொகை கைக்கிளையாய் என்
காதலும் முற்ற எழுதி எழுதியே
மணந்தேன் தமிழை இனியென்ன
வேண்டும் எனக்கில்லை கவலை
மருக வைக்கும் நானோர் பைங்குவளை…
பூவாக எனை நினைந்து வண்டாக
தமிழ் நுழைந்து உருக்கும் மனதை
துளி சிந்தாத தேனமுதாய் குடிக்கும்
என் சிந்தை முழுதும் பருகிட
ஏங்கிடும் தமிழ் கடலை….
ஆழியில் மூழ்கியே கிட்டிடும் முத்துபோல்
தமிழ் பெருங்காப்பியங்களில் மூழ்கியே முத்தெடுத்தோர் பலரிருக்க
புதுமைப் படைத்த முண்டாசுக் கவியின்
ரௌத்திரமும் பழகியோர் என்றென்றும்
நேர் கொண்ட பார்வையிலே வெற்றி நடைப் போடுவதும் தமிழாலே…
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.