பாரதியும் தமிழும்
கவிஞர்: ரா. யுவராம கிருஷ்ணன்
📚 ₹1500 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
ஆழி எனத் தமிழ் விரிந்து கிடக்க,
ஊழி கடந்தே உயிர்த்தது கவிதை!
அலை எனப் பாரதி ஆர்த்தெழுந்தானே,
மலை என வீரம் மடுத்தெழுந்தானே!
கடலின் ஆழம் கன்னித் தமிழ்,
கரை மோதும் வேகம் கவிஞன் பாரதி.
ஓயாத அலைகளாய் அவனது வரிகள்,
சாயாத வெற்றியைத் தமிழுக்குத் தந்தன!
விசும்பின் விரிவே மேவிய தமிழே,
பசும்பொன் கதிரவன் பாரதிச் சுடரே!
ஞாயிறு வந்தே இருளைக் கடியும்,
பாயும் ஒளியால் பாரதம் விடியும்!
வானின் நீலம் வற்றாத தமிழ்,
ஒளிரும் ஞாயிறு புரட்சிக் கவிஞன்.
கதிரவன் இன்றி வானம் ஏது?
பாரதி இன்றித் தமிழ் ஏது?
யாழ் எனத் தமிழ் இனிமையாய் ஒலிக்க,
ஏழிசை மீட்டும் விரல்கள் பாரதி!
நாதம் எழுப்பும் ஞானச் செம்மல்,
மறை கடந்த தமிழின் உன்னத உச்சி!
வீணை நரம்பாய் எமது மொழியிருக்க,
மீட்டும் விரலாய் அவன் கவியிருக்க,
பிறந்தது விடுதலைப் பெரும் ராகம்,
துறந்தது அடிமைத்தனப் பேய் மோகம்!
தமிழும் அவனும் வேறல்ல ஒன்றே,
உயிரும் உடலும் இணைந்தது நன்றே!
அழியாத புகழ் கொண்டவன் பாரதி,
ஒழியாத கவிதை தந்தவன் பாரதி!
செந்தமிழ்த் தேனின் இனிமை அவன்,
சிந்துப் பாடலின் செம்மல் அவன்!
அக்னிச் சிறகாய் பாரதி கவிதை,
அகிலம் போற்றும் அன்னைத் தமிழே!
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.