கவிஞர்: பிரபு பக்தமார்கண்டேயன்
📚 ₹1500 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
அண்டை வீட்டுமொழி
நீ என்றால்
உன்னை ஆகா ஓகோ…
எனப் புகழ்ந்து படித்திருப்பேன்
தகப்பன் மொழி
நீ என்றால்
பயந்தாவது படித்திருப்பேன்
தாத்தன் மொழி
நீ என்றால்
பேராசையுடன்
சொத்துக்காகப் படித்திருப்பேன்
பாட்டி மொழி
நீ என்றால்
சுருக்குப் பை காசுக்காவது படித்திருப்பேன்
அக்கா மொழி
நீ என்றால்
கோள் மூட்டலுக்கு பயந்து
கொஞ்சமாவது படித்திருப்பேன்
அண்ணன் மொழி
நீ என்றால்
வீம்புக்காவது படித்திருப்பேன்
தங்கை மொழி
நீ என்றால்
கொஞ்சி விளையாடிப்
படித்திருப்பேன்
தம்பி மொழி
நீ என்றால்
திமிருடனாவது படித்திருப்பேன்
காதலி மொழி
நீ என்றால்
வர்ணித்து வர்ணித்து
படித்திருப்பேன்
மனைவி மொழி
நீ என்றால்
பல்லைக் கடித்துக் கொண்டாவது படித்திருப்பேன்
மச்சான் மொழி
நீ என்றால்
சற்று இணக்கத்துடன்
படித்திருப்பேன்
மாமன் மொழி
நீ என்றால்
உரிமையுடன் படித்திருப்பேன்
மச்சினி மொழி
நீ என்றால்
சொல்லவே வேண்டாம்
பல்லைக் காட்டிப் படித்திருப்பேன்
மாமியார் மொழி
நீ என்றால்
வரதட்சணைக்காக வரிந்து கட்டிப் படித்திருப்பேன்
மாமனார் மொழி
நீ என்றால்
பரிதாபப்பட்டாவது
படித்திருப்பேன்
என்ன செய்ய
நீ என் தாய்மொழி ஆனதனால்
உன் அருமை நான் என்று உணர்ந்தேன்
நீ வெறும் மொழிதானே
உன்னைப் படிப்பின்
என்ன கிடைத்து விடப்போகிறது என்று
தாயே தமிழே எனை நீங்கா அறமே
மன்னிப்பாயா எனை?
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.