தமிழ் மீட்சியும் எழுச்சியும் அதன் தேவையும்
கவிஞர்: சிவா சூரியா
📚 ₹1500 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
பண்டைத் தமிழுக்கு பாரெங்கும் பாராட்டு,
அண்டை மானுடர்க்கோ பெருவியப்பு,
திட்டமிட்டு செய்துவந்த இருட்டடிப்பு,
திக்கெங்கும் பரவிவரும் மொழிக் கலப்பு.
சுட்டுவிட்டோம் என்றிவர்கள் கூவும் முன்னே,
சூரியன் போல் மேலேறு தமிழ்க் கண்ணே,
சிதையவில்லை தமிழ் எங்கள் சிந்தனையிலே,
அதை உரமாகக் கொண்டு வளர் தமிழ்ப்பயலே.
தொல்காப்பியம் வளர்த்த எங்கள் பழந்தமிழுக்கோ
பல்கலைக்கழகங்கள் வேண்டும் இப்போ,
அறிவியல் உட்பட பல துறைகள்
அழகான பைந்தமிழில் மாற்றிட வேண்டும்.
சித்தர்கள் கண்டறிந்த வைத்தியங்கள்,
தீராத நோய் தீர்க்கும் திரவியங்கள்,
அத்தனையும் வழக்கத்தில் வந்திடவே,
மக்கள் தமிழோடு நல்வாழ்வு பெற்றிடவே.
கயவர்கள் தூர்வார வேண்டாமென்றால்,
இளையவர் சீர் இலக்கியங்கள் முழங்கிட வேண்டும்,
செயற்கை நுண்ணறிவு வந்திடினும் — தமிழ்ச்
செயல்திறத்தை அதில் காட்டிட வேண்டும்.
தோழர்க்கு குறுஞ்செய்தி சொடுக்கையிலும்,
வலையத்தில் பெருஞ்செய்தி பதிகையிலும்,
அச்சமின்றி அன்புத் தமிழ் பழகிடுவோம்,
ஆருயிராய் தாய்த்தமிழைப் போற்றிடுவோம்.
நாளுக்கு ஒரு செய்யுள் கற்றிடினும்,
எதிர்காலச் சமுதாயம் தலைநிமிரும்,
இளைஞர்களே, சற்றே விழித்திருங்கள்,
இலக்குகளில் தமிழையும் சேர்த்திடுங்கள்.