தமிழ்
கவிஞர்: சூரியா
📚 ₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
கனிகளின் சுவைக்கு தமிழே மாற்று,
காற்றின் சுவாசத்துக்கு தமிழே கீற்று,
கிளிகளின் பேச்சுக்கு தமிழே ஊற்று,
மொழிகளின் தலைமைக்கு தமிழே கூற்று.
முன்னம் முகிழ்ந்த முதுபெரும் மூத்தமொழி,
அன்னம் தந்து தமிழனை காத்தமொழி,
திண்ணம் பூவுலகில் அதிகாலை பூத்தமொழி,
திருப்புகழ் படைத்து செம்மை ஏத்தமொழி.
இலக்கிய ஊற்றுகளின் பூர்விக நதி,
இனிமைக்கு இன்பம் தந்த இளரதி,
வளமிக்க வண்ணத்தமிழ் அறிவுக்கு பதி,
வண்டமிழ் வான்புகழை போற்றுவதே கதி.
வளங்கள் செழித்த சொல்வனம்,
வான்நிமிர்ந்து நிற்பதே தமிழின் தனிகுணம்,
தளங்கள் எங்கும் போற்றும் பாவை,
தலைவணங்கி பரணி பாடும் அவை.
ஈரடியில் மகத்துவம் தந்த புதுமை,
ஈடில்லாத பெருமை உடைய பதுமை,
பேரடியில் சங்க இலக்கிய மணிமகுடம்,
பேராயம் அன்னைத்தமிழுக்கு தனி இடம்.
இலக்கண வரையறையில் தமிழே முதன்மை,
இப்புவியிலே தனித்த முதுபெரும் தன்மை!
தேனும் திணையும் கலந்த தெள்ளமுது,
தேக்கம் தெளிக்கும் உயர்ந்த சொல்லமுது.
சங்கப் புலவர்கள் வளர்த்த பயிராகும்,
பொங்கு தமிழர்களின் உடல் உயிராகும்,
மங்கலம் நிறைந்த பொன் தமிழாகும்,
மணிமகுடம் சூடிய தங்கச் சிமிழாகும்.
கம்பன், பாரதி கவிபாடிய பெண்ணரசி,
காலம் பல கடந்த மண்ணரசி,
கரும்புச் சாரை மிகுந்த சுவையரசி,
கார்புகழ் போற்றி நிற்கும் அவையரசி.
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.